அந்த இளைஞனுக்கு அப்போது 17 வயது, தொடக்ககல்வி அப்போதே படித்திருந்தான்,1920களில் வள்ளியூர் பகுதியில் ஆங்கிலம் பேசும் அளவிற்கு கொஞ்சம் படித்திருந்தான்.
1925ல் ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகை நேரம், மும்பையில் “கேட் ஆப் இண்டியா” கட்டடம் எல்லாம் கட்டி மன்னரை வரவேற்க பிரிட்டிஷ் இந்தியா தயாராகிறது, எங்கும் விழாக்கோலம், எங்கும் மன்னர் பற்றிய பேச்சு.
அழைக்காமல் இந்தியாவிற்கு ஒரு விருந்தாளி வந்தார், அவர் பெயர் பஞ்சம். வந்ததும் வேலை தொடங்கினார், கிடைத்தது வறுமை.
ஆட்சியாளர்களின் சிந்தனை எல்லாம் இன்றைய தமிழக அமைச்சர்கள் போல, மேலிடத்தை மகிழ்விப்பது எப்படி என்றே இருந்தது, இந்திய பஞ்சம் அவர்களுக்கு காங்கிரஸ் ஈழ பிரச்சினைய கையாள்வது போல, ஏதோ சொல்வார்கள் ஒன்றும் நடக்காது.
கிட்டதட்ட 2 கோடி மக்கள் மாண்டார்கள், அன்றைய இந்திய (பாகிஸ்தான்,வங்கதேசம் இணைந்து) மக்கள் தொகை 10 கோடி. கவனியுங்கள் 5ல் ஒரு பங்கு மக்கள் மரணமடையுமளவிற்கு பஞ்சம்.
நமது பகுதி சொல்லவே வேண்டாம், இந்தியா வெள்ளத்தில் அழிந்தாலும் , 100 அடி ஆழத்தில் நாம் தண்ணீர் தேடுபவர்கள்.இன்று 500 அடி ஆழத்தில் தேடுகிறோம் அவ்வளவே.
எவ்வளவு கொடிய பஞ்சம் என்றால், காடுகளில் பறவைகள் செத்து கிடக்கின்றன, நான்குநேரிக்கு கிழக்கு பகுதியில் ஒரு வெள்ளை அதிகாரி குதிரையில் வருகிறான். ஒர் பெண் மடியில் எதையோ மறைத்து செல்கிறாள், களவு என நினைத்து மடியை பிரிக்க சொல்கிறான்
அவள் வைத்திருந்தது புற்றரிசி, எறும்ப்புகள் சேமித்து வைத்திருக்கும் ஒரு தானியம், புற்றை இடித்து எடுத்தேன்.அதனை கழுவி பிள்ளைகளுக்கு உணவாக்கி கொடுக்க போகிறேன் என்கிறாள். கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டான் அந்த அதிகாரி. அந்த அளவிற்கு பஞ்சம்
சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் கஞ்சிதொட்டிகள் (கழக அரசியல் அல்ல). கடலை,கருப்பட்டி உருண்டைகள் என மக்களுக்கு பசியாற்றிய காலம். இந்த இளைஞனுக்கு 17 வயதுதான் ஓடி ஓடி பார்க்கிறான், எங்கும் வறுமை,சாவு,சாப்பாடில்லை.
வறுமைக்கு அவனும் தப்பவில்லை, ஒரு கைகுழைந்தை மனைவியோடு பிழைப்பதற்காக மலேயா செல்கிறான், கடைசியாக அவன் அந்த மண்ணை பார்க்கும்பொழுது சொன்னது,
“இன்று என்னால் முடியவில்லை, எனக்கென்று ஒரு காலம் வரும் அன்று இப்பகுதி மக்களுக்கெல்லாம் ஏதாவது செய்வேன், இல்லை உணவாவது கொடுப்பேன்”
அவன் பின்னால் மலேய ரப்பர்தோட்ட அதிகாரி ஆனால் 1940களில் ஏராளமான வள்ளியூர் பகுதிமக்களுக்கு வேலைவாய்ப்பினை மலேயாவில் பெற்று கொடுத்தார், கொஞ்சம் பிரபலமானார். ஆதித்தனார் மற்றும் ஆதித்தனாரின் மாமனார் ஓ.ஆர் ராமசாமி போன்ற அந்நாளைய மலேய பிரபலங்களின் மதிப்பில் வாழ்ந்தார்.
மனமெல்லாம் வள்ளியூர், கனவெல்லாம் அந்த மக்களுக்கு எப்படி உதவுவது என்பது பற்றியே.
விதி வேறு வழியில் விளையாடியது, 11 பிள்ளைகளை வளர்க்கும் பெரும் பொறுப்புள்ள தந்தையானார். படிக்கவைத்தார்.வறுமைபட்டார் ஆனாலும் கனவினை விடவில்லை.
பிள்ளைகள் மிக உயரமான பதவிக்கு வந்தார்கள், ஆனால் அவருக்கு அதிலெல்லாம் மகிழ்ச்சியில்லை, காரணம் மனம் மலேயாவில் இல்லை அது வள்ளியூர் பக்கமே சுற்றியது
பணி ஓய்வு பெற்றார், பிள்ளைகள் மிக நல்ல நிலமை, எல்லோரும் சொன்னார்கள் “இங்க இருந்துட்டு ஊரையே நினைக்கிறதுக்கு ஒருவாட்டி ஊருக்கு போனால்தான் என்ன? ”
அவர் சொன்னார் “எனக்கொரு ஆசை உண்டு, வள்ளியூரில் ஒரு தொழில் தொடங்கி எல்லாருக்கும் வேலை கொடுக்கவேண்டும். அல்லது தேடி வருபவர்களுக்கு பணம் கொடுத்து தொழில் செய்ய ஊக்குவிக்க வேண்டும்
அதுவும் இல்லை என்றால் பெரிய பந்தலிட்டு எல்லாருக்கும் வயிரார சாப்பாடு போட வேண்டும், இதெற்கெல்லாம் பணமில்லை என்றால் நான் போகவே மாட்டேன்”
அவர் கனவுகண்டது பெரும் ஆசை,அதற்கேற்ற பொருள் அவரிடம் இல்லை. பெரும் மனகுறையோடு 1974ல் மரணமடைந்தார்.இறுதிவரை வள்ளியூரை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை,ஆனால் அவர் மறக்கவே இல்லை.
அவரின் கல்லறையை நான் பார்த்துகொண்டிருந்த பொழுது இந்த செய்தியை என்னோடு வந்த பெரியவர் சொன்னார், இவரோட அந்த பெரும் கனவுதான் இன்று வள்ளியூரில் முதியோர் இல்லம் நடப்பது என்றார்
உன்னால் முடியாததை உனது ரத்தம் சாதிக்கும் என்பார்கள் அல்லவா, அப்படித்தான் அவரது மூத்த மகன் வள்ளியூர் சென்று UVSS home தொடங்கி, பலபேரை இணைத்து எத்தனையோ ஆதரவற்ற பெரியவர்களை காப்பாற்றும் பெரும் காரியத்தினை செய்கிறார்
தெய்வம் கூடவேதான் இருக்கும், நமது வேண்டுதலை கேட்கும், நல்ல மனத்தோடு நினைத்தால் அதனை சந்ததி மூலமாவது நடத்திவைக்கும், அதற்கு இவர்தான் சாட்சி என்றான்
அந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்ட்டது.அவது மகனே பலரையும் ஒன்றிணைத்து UVSS home நிறுவிய திரு தங்கராஜ் அவர்கள்,
நிச்சயமாக சொல்லலாம், ஒரு கொடிய பஞ்சத்தினை பார்த்து, நம் பகுதிமக்களுக்கு ஏதாவது செய்ய நினைத்த அந்த சின்னப்பரின் ஆசை மட்டுமே நமக்கு தெரிகிறது, இன்னும் எத்தனை பெரியவர்கள் எவ்வளவு ஆசைபட்டார்களோ? அவர்களின் ஆசைகள் எப்படியெல்லாம் வள்ளியூரில் நிறைவேறி இருக்கிறது என்பன எல்லாம் அமைதியாக உறங்குகிறது
அய்யன் கோயில் படத்தினை பார்த்ததும் எதிரில் உள்ள அந்த வீடும், அந்த பெரியவரும், அவரின் கனவும் அந்த இல்லமும் நினைவில் வந்து போகிறது.
Like this:
Like Loading...