முதுமையின் துயரங்கள்

SAM_0410
சுதா ராமலிங்கம்
கருவறை தொடங்கி கல்லறை வரையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை எல்லாவற்றிலும் கொடுமையானது, வயோதிகக் காலத்தில் பெண்கள் சந்திக்கும் துயரங்கள். உடல் ஆரோக்கியம் தொடங்கி சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரத் தேவைகள் என எல்லாவற்றிலும் பிரச்சினைகள்தான். அனைத்து வகையிலும் பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் வாழ்கின்றனர்.
சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் அளவுக்கு வயதான பெண்கள் திரண்டு வந்த சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. அவர்களின் கோரிக்கை என்ன தெரியுமா? ‘வீட்டில் தனியாக வசிக்கும் வயதான பெண்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, தனியாக வசிக்கும் வயதான பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்பது அவர்களின் கோரிக்கை.
வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்கள், கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த இத்தகைய கொலைகளின் பட்டியல் நீளமானது.
75 வயதான ஜெயலட்சுமி, 72 வயதான காமாட்சி ஆகிய இருவரும் சகோதரிகள். மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்து வந்தனர். திடீரென ஒருநாள் இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். நகைகள் கொள்ளை போயிருந்தன. ராயப்பேட்டையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக இருந்த 64 வயதான விமலா, கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கிற வயதான பெண்களும் இத்தகைய கொடூரங்களுக்கு ஆளாகிறார்கள்.
கையில் பணம் இருந்தால், சில பிரச்சினைகள் குறையும். எனவே, கடைசிக் காலத்தில் பெண்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு மிகவும் அவசியமாகிறது. சிறுவாடு சேர்க்கும் பழக்கம் நம் பெண்களுக்கு இருந்தாலும், பெரும்பாலும் அதை, தங்களின் குடும்பத் தேவைகளுக்காகவே அவர்கள் செலவிடுகின்றனர். தங்களின் சொந்த விருப்பங்களுக்காக செலவிடுவதில்லை. ஆகவே, வயதான காலத்தில் அவர்களுக்கான சேமிப்பு எதுவும் இருப்பதில்லை. தனது அடிப்படைத் தேவைகள் அனைத்துக்கும் மற்றவர்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. முதியோர்களை சுமையாகப் பார்க்கிற சமூகச்சூழலில் வயதான பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாகி விடுகிறது.
தந்தை, சகோதரர், கணவர், மகன் என வாழ்நாள் முழுவதும் ஆண் உறவுகளையே சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் நம் பெண்களுக்கு உண்டு. கணவன் இறந்துவிட்டால், பிள்ளைகளைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். பெண் பிள்ளைகள், திருமணமாகி வேறு குடும்பத்துக்கு சென்றுவிடுகிறார்கள். ஆகவே, மகன்களை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. மகன்களோ, இன்றைய அவசர யுகத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக வெளியூர் அல்லது வெளிநாடு சென்றுவிடுகின்றனர். அதனால், பல தாய்மார்கள் ஆதரவற்றுப் போகின்றனர்.
வீடு, நிலம், நகை போன்ற மதிப்புமிக்க சொத்துக்கள் ஏதாவது இருந்தால், அந்தத் தாய்க்கு நல்ல கவனிப்பு கிடைக்கிறது. அந்தச் சொத்துக்களை, தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டும் பிள்ளைகளும் உள்ளனர். தங்கள் பெயரில் இருந்தால்தான், வங்கியில் கடன் வாங்க முடியும் என்று கூறி, சொத்தை எழுதி வாங்கிவிட்டு, பிறகு அந்தத் தாயைக் கைவிட்ட மகன்களுக்கு எதிரான பல வழக்குகள் என்னிடம் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளில், முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளன. நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் முதியோர் இல்லங்கள் அதிகம் திறக்கப்படுகின்றன. ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகள் கொண்ட முதியோர் இல்லங்கள் நிறைய உள்ளன. எல்லாம் இருந்தும் அன்பாக, ஆறுதலாக வார்த்தைகள் சொல்ல யாருமில்லை என்கிற ஏக்கம் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவர்களுக்கு அது கிடைப்பதில்லை. விதவைப் பெண் என்பதால், பல குடும்பங்களில் திருமணம் போன்ற விழாக்களில் இப்பெண்கள் முன்னிலைப் படுத்தப்படுவது இல்லை. தனியாக விடப்படுவதால், உளவியல் ரீதியாக கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
நகரத்துப் பெண்களுடன் ஒப்பிடுகையில், கிராமத்துப் பெண்கள் வயதான காலத்தில் சந்திக்க நேர்கிற பிரச்சினைகளை எளிதாக சமாளித்து விடுகிறார்கள். கிராமப்புறப் பெண்கள் கடின உழைப்பாளிகள். வாழ்நாள் முழுவதும் வறுமை உள்ளிட்ட பல கஷ்டங்களை எதிர்த்துப் போராடி பழக்கப்பட்டவர்கள் என்பதுதான் அதற்குக் காரணம். மேலும், வயதான பெண்களை சம்பந்தப்பட்ட உறவுகள் அலட்சியப்படுத்தினால், மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவர்கள் ஆளாக வேண்டியிருக்கும். அந்தப் பயம் கிராமங்களில் இருக்கிறது. ஆனால், மற்றவர்களின் ஏச்சுக்கள், பேச்சுக்கள் பற்றியெல்லாம் நகரங்களில் யாரும் கவலைப்படுவதில்லை. அதனால், நகரங்களைச் சேர்ந்த வயதான பெண்கள் சிரமப்படுகிறார்கள். ஆண், பெண் யாராக இருந்தாலும் வயதான காலத்தில் நோய்களுக்கு ஆளாகித் தீர வேண்டியது கட்டாயம் என்றாலும், பெண்கள் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். கர்ப்பப்பை புற்றுநோய், எலும்பு வலுவிழத்தல் உள்ளிட்ட நோய்களால் வயதான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இச்சூழலில்தான், முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக தனி சட்டம் ஒன்றையே மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, வயதான பெற்றோர்களைப் பாதுகாக்கத் தவறிய பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை பாதுகாக்கத் தவறினால், அவ்வாறு எழுதி வாங்கியது சட்டப்படி செல்லாது.  சட்டம் ஒருபுறம் இருந்தாலும் முதியவர்களைப் பாதுகாப்பது குடும்ப நன்மைக்கு எவ்வளவு அவசியம் என்பதை இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும். தனியாக இருக்கும் பெண்கள், தங்கள் அண்டை வீட்டார், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் அன்யோன்யமாகவும் கூட்டாகவும் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்.
கட்டுரையாளர், ஒரு மூத்த வழக்கறிஞர்
http://puthiyathalaimurai.com/this-week/1148

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம், NEW LIFE HOME FOR AGED DESTITUTES, UNITED VOLUNTEERS SERVICE SOCIETY and tagged , , . Bookmark the permalink.

1 Response to முதுமையின் துயரங்கள்

  1. அனைவரும் உணர வேண்டிய விசயங்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s