இன்று அவர்கள்… நாளை நீங்கள்!
உலக மக்கள் தொகையில் 8 சதவிகிதத்தினர் முதியோர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டில் 15 வயதுக்குட்டவர்களை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஜ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி உலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு முதியோர்களை குறித்த செய்திகளை பட்டியிலிடும் போது உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய அம்மா, அப்பாவை மறந்து விட்ட கொடூர உள்ளங்களும் இந்த சமுதாயத்தில் இருப்பதையும் குறிப்பிட வேண்டியதுள்ளது.
‘தாயின் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்றெல்லாம் பெற்றோருக்கு புகழாரம் சூட்டும் நம்நாட்டின் தான் பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் அவலமும் அரங்கேறுகிறது. வறுமையின் காரணமாக பெற்றோர்கள் புறக்கணித்ததாக 60 சதவிகிதத்தினர் சொல்கிறார்கள். வறுமையின் நடுவே தான் அந்த பெற்றோர்கள் அவர்களை வளர்த்தார்கள் என்பது மட்டும் 60 சதவிதத்தினருக்கு ஏன் புரியவில்லை. மற்ற 40 சதவிகிதத்தினர் வேலையின் காரணமாக நகரத்துக்குக்கு குடியேறியதால் பெற்றோரை கவனிக்க வீடுகளில் இடவசதியில்லை. கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பெற்றோரை அழைத்து வர முடியவில்லை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் புறக்கணிக்கப்படும் முதியவர்களை அரவணைக்க 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன. இதில் சில இல்லங்கள் கட்டண அடிப்படையில் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் 180 இல்லங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இல்லங்களில் தங்கி இருக்கும் ஒவ்வொரு முதியோருக்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது.
பெற்ற குழந்தைகளுக்காக ஓடாய் உழைத்து தேய்ந்த பெற்றோரை இளைய சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுப்பது வேதனைக்குரியது. மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி என உறவின் வட்டம் விரிந்திருந்தாலும் பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் ஒரு அறைக்குள் முடங்கி கிடக்கும் முதியோர்கள் பலர். அந்த அறை சிறைவாசம் கொடுமையானது. கொடூரமானது.
முதியோர்களுக்காக முதியோர் உதவி தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் பயன்பெற முடியாமல் நடையாய் நடக்கும் முதியோர்கள் பலர். இதிலும் ஆயிரத்தெட்டு நடைமுறைகள். அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு ஒரங்கப்பட்ட முதியோர்கள் பலர் இருக்கிறார்கள். முதியோர்களின் நலனுக்காக கடந்த 2007ல் முதியோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி சட்டபூர்வமான வாரிசுகள் பெற்றோரை கவனிக்கவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு 70 சதவிகித முதியோர்களிடம் இல்லை. மீதமுள்ளவர்கள் தன்னுடைய குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க விரும்புவதில்லை. இதனால் இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடந்த 2010 ஜூன் மாதத்தில் சென்னை பட்டாளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற முதியவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மகன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சட்டத்தின் கைது செய்யப்படுபவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
சொந்த பிள்ளைகளால் பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் தனிக்குடும்ப முறை. கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றைய அவசர கலியுகத்தில் கணவனும், மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் பெற்றோர்களை கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோர்களை தனிமை வாட்டுகிறது. மனம்விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள். சில குடும்பங்களில் மாமியார், மருமகள் பிரச்னை காரணமாக இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் சொத்து பிரச்னையும் முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்கள் செல்ல வழிவகிக்கிறது. இப்படி ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு சூழ்நிலை காரணமாக முதியோர் இல்லங்கள் இன்று நிரம்பி வழிகின்றன.
வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம். ஆனால் அந்த அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் என்பார்கள். மனித வாழ்க்கை ஒரு சங்கிலித் தொடர் போன்றது. குழந்தையாய் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மீண்டும் வயதாகி குழந்தையைப் போல மரணத்தை தழுவதே வாழ்க்கை. விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் குடும்பங்களிலும், சமூகத்திலும் பிரச்னைகள் ஏற்படாது. ஆனால் தன்னை ஆளாக்கிய அந்த தெய்வத்தையே அனாதையாக்கி விட்டு வாழ்கிறது வாழ்க்கை அல்ல.
முதியோர் நலுனுக்காக பாடுபடும் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற என்.ஜி.ஓ.வின் சென்னை இணை இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், “முதியோருக்கு உதவிக்கரமாக இந்த அமைப்பு செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட முதியோர்கள் 1253 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். சென்னையில் இந்த எண்ணுக்கு தினமும் 10 போன் அழைப்புகள் வருகின்றன. வறுமையே முதியோர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை இளைஞர்கள் மத்தியிலும், முதியோர்களுக்கும் ஏற்படுத்தி வருகிறோம். முதுமைப்பருவத்தை எப்படி வாழ வேண்டும் என்பதை திட்டமிட வழிமுறைகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி பிள்ளைகள் மட்டுமல்ல வீடுகளிலேயே பல முதியோர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கஅம்மா, அப்பா, முதியோர், அன்னை இல்லம்ள்” என்றார் வேதனையுடன்.
சமூக சேவகர் டி.பொன்சேகர் கூறுகையில், “ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும். இன்று அவர்கள் என்றால் நாளை நீங்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் தன்னுடைய கடமையை செய்தாலே போதும். கோயில், குளங்களுக்கு சென்று புண்ணியம் தேட வேண்டிய அவசியமில்லை” என்றார்.
காசு இருந்தால் எல்லாத்தையும் வாங்கி விடலாம். ஆனால் அம்மா, அப்பா என்ற உறவை வாங்க முடியுமா? -எஸ்.மகேஷ்
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=45433