முதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்

ஐயம் இட்டு உண்

நாஞ்சில் நாடன்
அக்கரை என்றோர் ஊரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
பொதுவாக ஆற்றின் மறுகரை என்பது பெறுபொருள்.
ஆற்றின் இக்கரையில் பிரதானமான ஊராக சுசீந்திரம் இருப்பதால், இரண்டாகப் பிளவுபட்டு கிடக்கும் மறுகரையில் இருக்கும் ஊரது.  நானிங்கு சொல்ல வருவது அந்த அக்கரையைதான்.  இந்த கர்நாடக இசை உலகில் கசிந்து குழைந்து உருகிவரும் வயலின் இசையொன்று அந்த ஊர்ச் சிறுமிக்குச் சொந்தமானது என்பதும் அறிக.
வடக்கு மலையில் உற்பத்தியாகி, நாஞ்சில் நாட்டின் குறுக்கே பாயும் பழையாற்றின் அக்கரை அது.  ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி அது.  ஒருகாலம் என்பது அண்மையான ஐம்பது ஆண்டுகளே.  இன்றும் அது வற்றாத நதிதான்., ஆனால் ஜீவநதி அல்ல. வடமேற்க்கு பருவ மழையும் தென்கிழக்கு பருவ மழையும் பொழிந்து வளமாக்கும், நீளமான நீல மலைக்காட்டில் ஊறி ஒழுகிவரும் ஆறு அது.  பூதப்பாண்டியின் இறச்சகுளத்தின் புத்தேரியின் கீழ்புறமும் திருப்பதிசாரத்தின் மேற்புறமுமாக மிகுந்த கலகலப்புடன் ஓடிவரும் ஆறு,  வீரநாராயண மங்கலத்தில் பாறையாறு என்றழைக்கப்பட்டது.  வழியெங்கும் அந்த ஆற்றில் மாடு குளிப்பாட்டுவார், மனிதர் குளிப்பார், துவைப்பார், நெல்வயற் புரவுகளில் மிஞ்சும் தண்ணீர் ஓடையாகி வந்து கலக்கும்.  எனினும் ஆறு அசுத்தப்படுவதில்லை. அழுக்குகளை மீன்கள் தின்னும். கொழுப்புச் சேராத இளம்பெண்ணின் மென்மயிர் சிலிர்க்கும் அடிவயிற்றுப் பரப்புபோல நிரப்பாக வெளுத்துக் கிடக்கும் மணல் அரிக்கும்.  கரை ஓரங்களில் நிற்க்கும் நாணல், தாழை, பேய்க்கரும்பு, கோரை,ஆனைஅருக்கம்புல் புதர்கள் சலிக்கும்.
முழுக் கதையையும் படிக்க:         ஐயம் இட்டு உண்
 

யாளிகள்…..

வண்ணதாசன் 
”நிழல் என்பது…?”என்று நான் தயங்கிய போது,    ஒரு முதியோர் இல்லம்    காப்பகம்.   விடுதி.    ஆஸ்ரமம்.     எப்படியென்றாலும் வைத்துக் கொள்ளலாம்.   என்னைப் போல முப்பத்தெட்டு பேர்கள்.     அறுபதிலிருந்து தற்போதைய நிலவரப்படி எண்பத்தாறு வயதுவரை.

 

..முழுக் கதையையும் படிக்கயாளிகள்

ஆத்மா

நாஞ்சில் நாடன் 
வணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரே. 
இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப் பனார்.  நாத்ரே என்பது குலப் பெயர். குலப் பெயரைவைத்து சாதியைத் தெரிந்துகொள்ளலாம் எனினும், குலப் பெயர் சாதிப்பெயர் அல்ல. Sur Name என்பர் வடவர் புலங்களில். நம்மில் நாடார், செட்டியார், தேவர், கவுண்டர்போல் அல்ல; மராத்தியத்தில் குல்கர்னி, ஷிண்டே, பாட்டில் பவார், காம்ப்ளி, சவான் போன்றவை.
பாபா சாகேப் அம்பேத்கர் இந்தக் குலப் பெயரை யாவரும் அணிந்து கொள்ள ஊக்குவித்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக இதைச் சமூகம் பயிலும் காரணத்தால், குலப் பெயரைக்கொண்டு காயஸ்த், மராட்டா, இன்ன பிற இனம் என வரையறுத்துச் சொல்ல இயலாது.
பீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரே ஆதிக்க சாதியா, அடிமை சாதியாஎன்பது இங்கே அநாவசியம். வண்டியும் படகில் ஏறும், படகும் வண்டியில் ஏறும் இன்று. மேலும், நாத்ரே சவம் ஆகிப் போன பின்பே யாம் அவரைஅறிமுகம் ஆகிறோம். ‘பெயரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு’ எனும் திருமூலர் வாக்கு ஆதாரம். இன்னொரு சித்தன் சிவ வாக்கியன் ‘என்பு தோல்இறைச்சி யில் இலக்கம் இட்டிருக்குதோ’ என்றான், யாரும் கூட்டாக்கவில்லை.
தத்துவ விசாரம் எமக்கு நோக்கம் இல்லை; அதற்கு ஆற்றலும் இல்லை. என்ன விசாரம், அதுவே நமது விசாரம். ஈண்டு பேச்சு பீதாம்பர் பாண்டு ரங்க் நாத்ரேயின் பிணத்தைப் பற்றியது. அவர் பிணமான சில நொடிகளே ஆன நிலையில், இந்தத் தகவல் வாசகருக்குத் தரப்படுகிறது. ‘முக்தி நய்யா’ எனும் பெயர்கொண்ட, மொழி பெயர்த்துச் சொன்னால், ‘முக்தி நாவாய்’ எனப் பொருள் தரும். அப்படியும் அர்த்தமாக வில்லை என்றால், ‘மோட்சப் படகு’ என்று வழங்கப்படும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது நிலையில், சி ஃப்ளாட்டில் வசிக்கும் எலி, கண்டாங்கிப் பாச்சை, பல்லி தவிர, வேறொரு குருவிக்கும் இந்தத் தகவல் இன்னும் சென்று அடையவில்லை.
‘பிறகெப்படி உமக்குத் தெரியும் வேய்?’ எனும் வினா நியாயமானதுதான். அதுதான் கதாசிரியனின் வசதி. ஒளியும், ஒலியும், வளியும் நுழைய இயலாத இடத்தையும் உற்று நோக்கும் வசதி.
நாத்ரே அப்போதுதான் உயிர் நீத்திருந்தார். உடம்புச் சூடு இன்னும் ஆறி இருக்கவில்லை. வழக்கம்போல 6 மணிக்கு எழுந்து சண்டாஸ் போய், பல் துலக்கி, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் ஃபிரிஜ்ஜில் இருந்து எடுத்துப் பருகியபோது தலை கிர்ரென்றது. அது அவருக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
வழக்கமாக, வலது கையில் கைத்தடி ஊன்றியவாறு, லிஃப்ட்டில் கீழிறங்கி, குடியிருப்பின் பக்கம் இருந்த உத்யான் போய், நடைபாதையில் 40 நிமிடங்கள் அவசரம் இல்லாமல் நடப்பார். ஜூன் முதல் அக்டோபர் வரை மும்பையில் பருவ மழைக் காலம். மழை வெறித்திருந்த காலையில் அல்லது மாலையில் மட்டுமே நடக்க இயலும்.
காலையில் நடந்து திரும்பும்போது ‘வார்ணா’ பால் அரை லிட்டர் பாக்கெட், மராத்தி தினசரி லோக் சத்தா, ஆங்கிலதினசரி டைம்ஸ் ஆஃப் இண்டியா கடையில் வாங்கி வந்து மறுபடியும் லிஃப்ட்டில் ஏறி, கதவைத் திறப்பார்.
முதலில் கடக் சாய் போட்டுப் பருகிவிட்டு, செய்தித் தாள்கள். பின்பு சவரம், குளியல். 87 வயதானாலும் தினசரி சவரம் செய்யஅலுப்பது இல்லை.
அன்று எதற்கும் அவசியம் இல்லாமல் போயிற்று.
கிர்ரென்று தலை சுழன்றதோடு மட்டுமன்றி, சளசளவென வியர்த்தது. மேலும் மேலும் எடையேற்றியதுபோல் இறுகி மார் வலித்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. நாத்ரேக்குப் புரிந்துபோயிற்று, கிடக்கப் படுத்தால் கிடந்து ஒழிந்துவிடலாம் என. எதற்கும் வாயிற் கதவைத் திறந்துவைத்துவிடலாம் என்று எண்ணி, எழுந்து நின்று சிற்றடிவைக்கும் முன் சோபாவில் சரிந்து விழுந்தார். சொர்க்கம் அல்லது நரகத்தை நோக்கிய கடைசிக் காலடி.
சரி, சுபம்… கதை முடிந்தது, ‘இந்தக் கதாசிரியன் எழுதிய மிகச் சிறிய கதை இது’ எனத் தாண்டிப் போக எண்ணாதீர். இனிதான் கதையே துவங்குகிறது.
நாத்ரேயின் பூர்வீகம் கொங்கண் என்று அழைக்கப்படும் மராத்திய மாநிலத்தின் தெற்குக் கடற்கரைப் பிரதேசம். மத்தியப் பகுதியும் வடக்குப் பகுதியும் மராத்வாடா, விதர்பா என அழைக்கப்பெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலை சரிந்து, அரபிக் கடலை ஆரத் தழுவும் ரத்னகிரி பிரதேசத்தில், சத்ரபதி சிவாஜியின் கடற்படைத் தளபதி… மாவீரன் கனோஜி ஆங்கரே கட்டிய கடற்கோட்டைக்குப் போகும் வழியில் அமைந்த சின்னஞ் சிறு கிராமம். மதியச் சமையலுக்கு என, காலை எட்டரை மணிக்கே போம்பில், மாந்தேலி எனச் சிறு மீன்கள் வரும். சற்று நேரம் சென்றால் பாங்கடா, பாம்லெட் என நடுத்தர மீன்கள் வரும். காத்திருந்தால், சிங்காடா, சுர்மாயி எனும் பெரு மீன்கள் வரும்.தேங்காய் அரைத்த குழம்பும் அரிசிச் சோறும்.
பண்ருட்டிப் பலாப் பழமே, சேலத்து மாங்கனியே என சினிமாவுக்குப் பாட்டு எழுதுபவர், ரத்னகிரிப் பிரதேசத்துப் பலாப் பழமும் ஆப்புஸ் மாங்கனியும் தின்று இருக்க வாய்ப்பு இல்லை.
நாத்ரே குடும்பம் மிகச் சாதாரணமானது. காட்டு விவசாயம். அவரது தாதா பிரிட்டிஷ் நிலப் படையில் குதிரைப் பராமரிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அன்று கையூட்டு, இன்றைய வங்கி வைப்பு நிதி வட்டி விகிதம் போல் இருந்தது. மந்திரிமாருக்குப் பாயும் வெள்ளத்தின் சிற்றோடை அதிகாரிகளுக்கும் கவர் பிரிந்தது. நாத்ரே குடும்பம் பச்சை பிடித்தது.
ரத்னகிரியில் அவர் பிறந்து வளர்ந்தஊரை அடுத்து பண்ணை வீடு ஒன்று வாய்த்தது. 15.36 ஏக்கர். மேற்கும் கிழக்கும் நிலப் பகுதி. வடக்கில் மன்னும் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவு. தெற்கில் அரபிக் கடலில் கால் நனைக்கலாம். நாத்ரேயின் தோட்ட வீட்டின் தட்டட்டியில் நின்று பார்த்தால், ரத்னகிரிக் கோட்டையைக் காணலாம். அரபிக் கடலி னுள் பல கோட்டைகள் சமைத்த கப்பற் படைத் தலைவன் கனோஜி ஆங்கரேயை, கடற்கொள்ளைக்காரன் என்று வரலாற்று ஏடுகளில் ஆங்கிலேயர் பொறித்துவைத்தனர். விடுதலைக்குப் பிறகு, அவன் பெயரில் மும்பையில் கப்பற் படைப் பயிற்சித் தளம் உள்ளது.
அடர் நீலக் கடல் சூழ்ந்த கோட்டை அது. கயிறு கட்டிய பலூன்போலக் கடலில் கிடப்பது. கயிறு என்பது நிலத்தில் இருந்து கோட்டைக்குப் போகும் தார் சாலை. தோன்றும்போது காரை எடுத்துக்கொண்டு போய் கோட்டையுள் இருக்கும் துர்கா தேவி மந்திரில் தொழுது, நெற்றியில் செஞ்சாந்து தீட்டி வருவார் நாத்ரே. நாத்ரேவுக்கு சற்றே ‘அம்ச்சி மும்பாய், அம்ச்சி மானுஸ்’ சாய்வு உண்டு. எனினும் சிவசேனைக்காரர் அல்ல.
தோட்டம் பூராவும் ஆப்புஸ் என்று அழைக்கப்படும் அல்போன்சா மாமரங்கள், வருக்கைப் பலா, கொல்லா மா, வாழை, தென்னை, பிற தோட்டப் பயிர்கள். கொல்லா மா எனும் முந்திரி அல்லது காஜு, பழுத்து உதிரும் காலங்களில் கோவா, மட்காவ்வில் இருந்து ஆள் கொணர்ந்து முந்திரி ஃபென்னி வாற்றி எடுத்து ஆண்டுக்கும் வைத்துக்கொள் வார் நாத்ரே. நண்பர்களுக்கும் பரிசாகச் சில போத்தல்கள் போகும். விடுமுறைக் காலங் களில் சென்று தங்கும் ஓய்விடமாகவும் இருந் தது அந்தப் பண்ணை வீடு.
பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனது காலம். பெண் மக்கள் இருவரும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிரந்தரக் குடிமக்கள். பச்சை அட்டை. தேர்தல் வருவதுபோல் வந்து போவார்கள். மகன் மும்பை மாநகரின் தென் கோடியில் கொலாபா தாண்டி… சசூன் டாக் தாண்டி… 5 கோடி பெறுமதி உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில். 1,500 சதுர அடிகொண்ட மூன்று படுக்கை அறை ஃபிளாட்டில், கடல் பார்த்த பால்கனிவீட்டில். தேசிய வங்கி ஒன்றில் பொது மேலாளர்.
நாத்ரே தனது சொந்தக் குடியிருப்பில் மனைவியுடன் வாழ்ந்தார். ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் வரை அல்கா பாயி, நாத்ரேயைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கினாள். பூரண் போளி, ஆலு வடி, சாபுதானா கிச்சடி, ஆம்ரஸ் பூரி, பாக்ரி-லசூன் சட்னி, கோக்கம் ரஸ், பொட்டாட்டோ போஹா எனத் தினந் தோறும் தேரோட்டம்.
வல்வினைபோல் வந்து வாய்த்தது அல்கா பாயிக்கு பார்க்கின்சன் நோய். கை கால் நடுக்கம், நினைவு அடுக்குகளில் சரிவு, நினைவு பிறழ்தல்… கிடந்தகிடையாக ஆயிற்று. குழந்தை யைப்போலப் பராமரித்தார் நாத்ரே. தன்னுடன் வைத்துக்கொள்ள இயலாமற் போனதற்கு மகன் சின்ன நாத்ரே, ஒரு பாடு காரணங்கள் சொன் னான். மகனையும் சொல்லித் தப்பில்லை. வேலை பார்க்கும் கணவன், மனைவியர், கல்லூரியில் படிக்கும் இரு பெண்கள். மேலும், முதுமையும் நோயும் தோள் மாற்றிச் சுமக்க வல்லதா?
பகலில் ஒரு நர்ஸ் வந்து போவாள். காலை 9 முதல் மாலை 5 வரை வேலை நேரம். 30 நிமிடங்கள் உணவு இடைவெளி. காலையில் வந்ததும் டயாபர் மாற்றி, பல் தேய்த்துவிட்டு, குளிப்பித்து, உடை மாற்றி, உணவு ஊட்டி, வாய் துடைத்து, மாத்திரைகள் கொடுத்து, தலை வாரி, செந்தூர் வைத்து…
அவளுக்கும் வார விடுமுறை உண்டு. சில நாட்கள் வராமலும் இருப்பாள். சில நாட்கள் தாமதமாக வருவாள். சில நாட்கள் சீக்கிர மாகப் போக வேண்டியது இருக்கும். நாத்ரே பத்திரமாகப் பார்த்துக்கொண்டார். நர்ஸ் சமைப்பாளா என்ன? காலையில் சாய், காரி பிஸ்கட் அல்லது பிரட் டோஸ்ட். பட்டர்… கொழுப்பு, ஜாம்… சர்க்கரை, ஆம்லெட்… கொலஸ்ட்ரால். ஆகாது. சில நாட்கள் மதியத்துக்கு ரொட்டியும் தாலும் செய்து பார்த்தார் நாத்ரே. 75 வயதில் சமையல் கற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம்.
நாத்ரேயின் குடியிருப்பு, மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இருந்து தாணே போகும் சென்ட்ரல் ரயில்வே மெயின் லைன் இருப்புப் பாதையில், மூலண்ட் ஸ்டேஷனில் இருந்தது. ரயில் நிலையத்தில் இருந்து மேற்குப் பக்கம் வெளியே வந்ததும் இரு வசமும்உணவுக் கடைகள் உண்டு. உணவுக் கடை எனில், ஹோட்டல் அல்ல. வீட்டில் தயாரித்துக் கொணர்ந்து விற்பனைக்கு வைத்திருக்கும் உணவுப் பண்டங்கள் விற்கும் ஸ்டால்கள். ஹாட் பேக்குகளில் சேமிக்கப்பட்டவை.
சப்பாத்தி, பாக்ரி எனில் எண்ணத்துக்கு விலை. தால், கடி எனில் முகத்தல் அளவு. சோறு எனில் வாட்டி அளவு. தினமும் பொடி நடையாகப் போய், தலைக்கு மூன்று சப்பாத்தி, ஒரு கிண்ணம் சோறு, அரை லிட்டர் பருப்பு,  
கால் கிலோ சப்ஜி வாங்கிக்கொள்வார். ஒரு நாள் கத்தரிக்காய் – உருளைக் கிழங்கு,மறுநாள் உருளைக் கிழங்கு – வெந்தயக் கீரை, மூன்றாவது நாள் வெண்டைக்காய் என மாற்றி மாற்றி. சில சமயம், ஒரு வாட்டி தயிர். இரவுக்கு பிரட் டோஸ்ட், சுடு பால்.
மிகவும் ஆசைப்படும் நாளில் காமத் ஹோட்டலில் இரவு இட்லி, வடா-சாம்பார் சாப்பிட்டுவிட்டு, பாத்திரத்தில் அல்கா பாயிக் கும் வாங்கி வந்து ஊட்டிவிடுவார்.
வாரந்தோறும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழும் மகள்கள் பேசுவார்கள், சரியாக முன்னிரவில், ஞாயிறுதோறும் அல்லது ஞாயிறு விட்டு ஞாயிறில் மகன் நேரில் வந்து போவான். சந்த்ரி, மொசம்பி, சிக்கு, அனார், ஆம், சபர்ஜலி, கேலா எனும் ஏதோ ஒரு பருவ காலக் கனி வர்க்கத்துடன். இதெல்லாம் அமாவாசை அல்லது பௌர்ணமிபோல் அதன் பாட்டுக்கு நிகழும்.
”காய், தாதா? கஸ காய்?” எனத் துவங்கும் அன்பு கசியும் உசாவல். மருமகளோ எனில், ”காய், ஆயி? கஸ காய் துமி?” எனத் தன் பங்குக்கும் சொரிவாள். சரியாக ஒரு மணி நேரம் ஸ்லாட். மருமகளே சாய் போட்டு யாவ ரும் பருகுவார்கள். பிறகென்ன? ”சலோ, அமி நிக்லா… போன் கரோ… தபேத் சமாலோ!” என்றொரு விடைபெறல்.
நாத்ரேக்குச் சொந்த வீடு. பராமரிப்பு, சௌகிதார் சம்பளப் பங்கு, பால், தினசரிகள், பிரட், காரி பிஸ்கட், தால் – ரொட்டி, பற்பசை முதலாய டாய்லெட் சாமான்கள், மருந்துகள், நர்ஸ் சம்பளம், செல்போன் பில், கரன்ட் செலவு யாவும் சேர்ந்து மொத்தமாக 20,000 பக்கம் ஆகிவிடும். பவிஷ்ய நிதி, ஓய்வுத் தொகை யாவுமாக 36 லட்சங்கள் மூத்த குடிமகனுக்கான அரை சதவிகித அதிக வட்டி தேக்கி வைப்பு நிதியாக வங்கியில் கிடந்தது. ஓய்வு ஊதியத்திலேயே ஒரு பங்கு மிச்சம் தான்.
ஆண்டுக்கு ஒரு முறை வரும் கண்பதி பாப்பா பண்டிகைக்குத் தாராளமாக நன் கொடை கொடுப்பார். மொத்த காலனிக் குழந் தைகள், சிறுவர் சிறுமியருக்கு அவர் தாதா. பிறருக்கு காக்கா. அபூர்வமாகச் சிலருக்கு மாமா அல்லது அண்ணா.
தீபாவளிக்கும் குடிபட்வாவுக்கும் மகன் குடும்பம் வந்து போகும் பலகாரத் தினுசு களுடன். அந்த நாட்களில் சக்ளியும் கரஞ்சியும் பேசின் லாடுவும் அண்டை அயலிலும் மலிந்து கிடக்கும். சென்ற முறை நாத்ரே மக்களிடம் சொன்னார், ”இருக்கும் துணிமணிகள் இனி காலத்துக்கும் காணும். இனி, புதுசு எடுத்து அநாவசியத்துக்குச் செலவிட வேணாம்” என்று.
அல்கா பாயிக்கு மரணம் பையப் பைய, ஆரவாரம் இல்லாமல், முக்கல் முனகல் வலி வேதனையுடன் வந்தது. நாத்ரே கடைசிச் சொட்டு கங்கை தீர்த்தம் ஒழுக்கினார். 78 வயது என்பது பெருவாழ்வுதான். நோய் ஒன்றே கரும்புள்ளி. எவருக்கும் வஞ்சனை செய்யாமல், வாரிச் சுருட்டாமல், வயிற்றில் அடிக்காமல் 60 வாழ்ந்தாலே பெருவாழ்வு.
அன்று நாத்ரேக்கு 81 கடந்த காலம்.
ஆயி மரணத்துக்குப் பெண்கள் வரவில்லை. மகன் இருந்தான், கொள்ளி போட்டு முழங்கை மயிர் மழித்துக்கொள்ள. அல்கா பாயின் உருப் படிகளை மூன்று பங்குகளாக்கி தனித் தனியே நகைப் பெட்டிகளில் போட்டு, மருமகளிடம் ஒப்படைத்தார்.
இனியாவது உடன் வந்து இருக்கும்படி ஒப்புக்குக்கூட மகனோ, மருமகளோ கூப்பிட வில்லை. மூன்று படுக்கையறைக் குடியிருப்பே ஆனாலும் ஒன்று தம்பதியினருக்கு, மற்ற இரண் டும் மகள்களுக்குப் போனாலும் நாத்ரே வரவேற்பறையில்தான் படுக்க வேண்டும். அல்லது பால்கனியை மூடி, அதில் ஒரு கட்டில் போட வேண்டும். என்றாலும் எவரது கக்கூஸ் – குளிமுறியை அவர் உபயோகிப்பார்? அல்லது இப்போதுதான் ஆயி இல்லையே, வடீல் தனியாக சமாளித்துக்கொள்வார் என சின்ன நாத்ரே எண்ணி இருக்கலாம். அல்லது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சகோதரிகள்வந்தால், தாதா தனியாக இருந்தால்தான் தங்கத் தோதாக இருக்கும் என்று எண்ணி இருக்கலாம்.அன்றியும் ஒரே நகரில்தானே வாழ்கிறார்கள். நினைத்தால் வந்து எய்திவிட இயலாதா?
திருமணம் அன்று எடுத்துக்கொண்ட, பெரிதுபடுத்தப்பட்ட, சட்டம் கட்டி சுவரில் மாட்டப்பட்ட, கறுப்பு – வெள்ளைப் புகைப் படத்தில் இருந்த அல்கா பாயியைச் சில நாட் கள் நெடு நேரம் பார்த்துக்கொண்டு இருப்பார் புட்டா நாத்ரே. மூக்கில் முத்துக்கள் கோத்த நத்து, பெரிய தோடுகள் செவியில், வட்டப் பொட்டு, மராத்திப் பெண்களுக்கேயான தார் பாய்ச்சிய புடவைக் கட்டு.
சில ஒழுங்குகள் செய்தார் நாத்ரே. தன் காலத்துக்குப் பிறகு, தோட்ட வீடு மகனுக்கு. தான் குடியிருக்கும் வீடும் அந்தேரியில் வாட கைக்கு விட்டிருக்கும் வீடும் இரண்டு மகள் களுக்கும். வங்கியில் கிடக்கும் வைப்பு நிதி முழுக்க இரு மகன் வழிப் பேத்திகளுக்கும் என்று உயில் எழுதிப் பதிவு செய்தார்.
ஆயிற்று, அல்கா பாயி இறந்துபோய் ஆறு ஆண்டுகள். தினமும் எத்தனை சினிமா, சீரியல் பார்ப்பது? எத்தனை மணி நேரம் தூங்கி எழுவது? ஓய்வூதியம் வாங்க ஆரம்பித்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. எத்தனை உழைத்து இருந்தாலும் அரசுக்குப் பொருள் இழப்புதான். சோற்றுக்குச் செலவு, பூமிக்கும் பாரம்.
நாத்ரே உடல் குளிர ஆரம்பித்தது… ஒன்ப தாவது நிலை என்றால் என்ன, ஈக்கள் வராதா? ஒழுகி இருந்த கடைவாயில் ஈக்கள் அமர்ந்து எழுந்தன. அந்தத் தளத்தில் இருந்த மற்ற மூன்று வீட்டுக்காரர்களுக்கும் பொதுச் சொத்தாக இருக்கலாம் அவை. அவரவர் அலுவலகம், தொழிற்கூடம், பள்ளி, கல்லூரி என விரைய ஆரம்பிக்கும் காலைப் பொழுது. இன்றோ, நாளையோ தாதாவை, காக்காவை, மாமாவை, அண்ணாவைக் காணோமே என எவருக்கோ தோன்றலாம்.
மகன் வீட்டுக்கோ, ரத்னகிரிக்கோ போய் இருப்பார் என நினைக்கவும் ஆகலாம். ஒரு நாள் பொறுத்து காற்றில் துழாவும் மெல்லிய துர்நாற்றத்தின் மூலத்தைத் தமது இல்லங் களுக்கு உள்ளே இண்டு இடுக்குகளில் தேடலாம். கனத்த பிண நாற்றம் காற்றில் பரவ மூன்று நாட்கள் ஆகலாம். இறந்த கிழ நாத்ரேயின் பிணம் அழுக ஆரம்பிக்கும்.நாற்றம் வரும் திசை அறிய வரும். மூலம் உணர்ந்து, போலீஸுக்குச் சொல்லி, கதவை உடைக்கலாம்.
அவரது ஆத்மாவுக்கு அதன் பின் சாந்தியும் கிடைக்கலாம்!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

கருவறைக் குற்றவாளிகள்..!

 

 
கருவறையில் இடம் தந்தேன்..!
உன் வீட்டில் நான் வசிக்க..
இல்லையா சிறு அறை..!
இது ஒரு கவிஞனின் ஹைக்கூ..!
பெற்ற மகன்களால் அன்பாகப் பராமரிக்கப்படாமல், முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்ட அபலை மூதாட்டியின் ஆதங்கக் குரலாய் ஒலிக்கிறது இந்த புதுக் கவிதை..!
தோளிலும், மார்பிலும் தாலாட்டிய உறவுகளே பாராமுகம் காட்டுவதால், முதியவர்கள் வேதனையில் உள்ளனர். அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைகள்,வளர்ந்து ஆளானவுடன் பெற்றவர்களைப் பாரமெனக் கருதி, முதியோர் இல்லத்தில் தள்ளும் போக்கு ஆபத்தானது..!
கூட்டுக் குடும்பமுறை சிதைந்து விட்டதால், தற்காலக் குழந்தைகளின் சிந்தனையோட்டமே மாறிப்போய் விட்டதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.
ப்ரி கே.ஜி. வகுப்பு பிரேயர் கூட “காட் பிளெஸ் மம்மி..; காட் பிளெஸ் டாடி..; மேக் தெம் ஹாப்பி..!” என மனித மனங்களைப் போல சுருங்கிப் போய்விட்டன..!
தெருவில் ஒரு பெண், தனது குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். “அந்தக் கிழவிட்ட போவியா..! போவியா..!”
மகனிடம் கோபித்துக் கொண்டு, பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கும், அவரது மாமியாரைத்தான் சாடையாகச் சாடுகிறார் என்பதை யூகிக்க முடிந்தது.
மற்றொரு சம்பவத்தில், வீதியில் இரு இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தால்.., கிடைத்த தகவல் பகீரென்றது..! அவர்களது தந்தை இறந்துவிட்ட நிலையில், வயதான தாயாரை யார் பார்த்துக் கொள்வது..? என்பதில் தான் இருவருக்கும் தகராறாம்..!
பிரமை பிடித்ததுபோல ஒரு மூதாட்டி, ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்..
அவர்களுடைய தாயாகத்தான் இருக்க வேண்டும்..! இப்படிப்பட்ட மகன்களைப் பெற்று வளர்த்து ஆளாக்க, அப்பெண் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்..?
“திரைகடலோடியும் திரவியம் தேட” வெளிநாடுகளுக்குச் செல்வோர், முதலில் ஓரிரு மாதங்களுக்குப் பெற்றோரிடம் தொலைபேசியில் நலம் விசாரிக்கின்றனர்.
திருமணமாகி அங்கேயே செட்டிலாகி விட்டால்,அதன்பிறகு தலைகீழ் மாற்றம்.
தொப்புள்கொடி உறவு, கடைசிவரை தொலைத்தொடர்பு உறவாக மட்டுமே தொடரும் அவலம் நிகழ்கிறது.
பொருளாதாரக் காரணங்களைக் கூறி தாய், தந்தையரைப் பிரித்து நீ ஆறு மாசம்; நான் ஆறு மாசம்; என அலைக்கழிக்க விடுவோரும் உண்டு..!
பாரத அன்னையாக நாட்டைக் கொண்டாடுகிறோம்.. தாய், தந்தையரைத் துண்டாடுகிறோம்..!
எங்கே போய்க் கொண்டிருக்கிறது..?
வந்தாரை வாழவைக்கும் தேசம்..!
முதியோர் இல்லங்கள்..!
சமூகத்தில் வேகமாகப் பரவிவரும் கரையான்கள்..!
நலிவுற்ற மனிதர்களை, காலனிடம் துரிதமாக அழைத்துச் செல்லும் முதுமக்கள் தாழிகள்..!
உணவும், உறைவிடமும் கிடைத்துவிட்டாலும், உடல் நோவோடு போராடும் காலத்தில், கழிவிரக்கம் சூழ்ந்த தனிமையில் முதியோர் இல்லங்களில் ஒடுங்கும் மனிதர்களிடையே அன்பு துளிர்க்குமா..?
அன்பாய் மடியில் தவழ்ந்து விளையாடிய குழந்தைகளே புறக்கணித்ததால், எஞ்சிய  காலம் முழுவதும் ஆற்றாமையோடும், ஒருவிதத் தவிப்போடுமே கழியும்.! 
தனிமையின் கொடுமையே, அந்திமக் காலத்தை விரைவுபடுத்திவிடும்.. இதனைச் சுயநலமிக்க வாரிசுகள் உணராதிருப்பது விநோதமானது..!
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசின் தலைமைச் செயலர் பேசுகையில், நாட்டில் முதியோர் இல்லங்களே இல்லாமல் போக வேண்டும்; மேலைநாட்டுக் கலாசார முறை இங்கு பரவுவதால், முதியோரை மதிக்கும் எண்ணம் அருகி வருவதாக ஆதங்கப்பட்டார்.
மதுரையில் மட்டும், 2006ல் 6ஆக இருந்த முதியோர் இல்லங்கள், 2009ல் 86 ஆகப் பெருகி, நூறை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
பெற்றோரைப் புறக்கணித்தால், 3 மாதம் சிறைத் தண்டனை என அரசு சட்டம் இயற்றியுள்ளது.
ஆனால், இதுவரை ஒரு சிலர் கூட இச்சட்டத்தின்கீழ் கைதானதாகத்  தகவல் இல்லையே..!  ஏன்..?
தம்மைப் புறக்கணித்தாலும், தண்டிக்க விரும்பாத தாய், தந்தையரின் புத்திர பாசத்தால்தான், இப்படிப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோரைக் கைவிடுவோரைப் பிடிக்க, காவல்துறையினர் எங்கும் செல்ல வேண்டியதில்லை. முதியோர் இல்லங்களில் முதலில் விசாரணையைத் தொடங்கினாலே போதும்..!
தனிக்குடித்தனம் செல்வதற்காக முதியவர்களைக் கைவிடுவோர் கூறும் பொதுவான குற்றச்சாட்டு, “எப்போதும் முரண்பட்டு, பிடிவாதப் போக்குடனே நடந்து கொள்கிறார்கள்..”
ஒரு வாதத்துக்கு இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அதற்காக.. அவர்களைத்  தனிமைப்படுத்துவது நியாயமா..?
வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல, பெற்றோரிடமே குற்றம் காணும் பிள்ளைகள்தான் கருவறையில் பிறந்த குற்றவாளிகள்..!
இவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை போதாதுதான்..!
எஞ்சியிருக்கும் கொஞ்சகாலமாவது பேரன், பேத்திகளோடு அவர்கள் கொஞ்சி விளையாடி கவலைகளை மறந்திருக்க வேண்டாமா..?
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது.
“முற்பகல் செய்யின்.. பிற்பகல் விளையும்..!”
என்பதுதானே நியதி.
பெற்றோர்களுக்கு இவர்கள் என்ன தண்டனையை அளித்தார்களோ..!
பின்னாளில், அதே தண்டனையைத் தரத்தான், இவர்களது குழந்தைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
(ப.செ.சங்கரநாராயணன்)
*************************

முதியோரை தத்தெடுப்போம்!

இந்திய மற்றும் பெரும்பாலும் ஆசிய மக்களின் சிந்தனைக்கும் ஐரோப்பிய மக்களின் சிந்தனைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன என்பதை அனுபத்தில் பார்த்து வருகிறேன். எது எதில் பெரியது, எது எதில் சிறந்தது  உயர்த்தது என்று பார்ப்பதற்கு பதில் எங்கு எப்படி வாழ்க்கை முறை உள்ளன என்று பார்க்கும் பார்வையின் அடிப்படையில் எனது இந்த கருத்து.
 ஐரோப்பாவில், அதிலும் குறிப்பாக ஜெர்மனியில் நான் பெற்றோர்கள் குழந்தைகளை அண்டி வாழும் நிலையைப் பார்க்கவில்லை. 90 வயதில் கூட தானே சுயமாக கார் ஓட்டிச் செல்லும் மூதாட்டியும், தானே தனது இல்லத்தை தூய்மை செய்து சமைத்து உணவு உண்டு தனது நேரத்தை தமக்கு பிடித்த வகையில் செலவு செய்யும் வயதான அப்பா அம்மாக்களையும் நான் காண்கிறேன்.
 வயதான காலத்தில் என்னை மகன்/மகள் கவனிக்க வேண்டு மென்ற  எண்ணத்திற்கு பதிலாக வயதான காலத்தில் நான் எனது வாழ் நாட்களை எனக்குப் பிடித்த வகையில் வாழ்கிறேன் என்று பெரும்பாலான முதிர்ந்தவர்கள் தனது காரியங்களை தாமே பார்த்துக் கொண்டு வாழ்வதை  பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக ஜெர்மன் இன மக்கள் மத்தியில்.
 இப்படி செய்வதனால் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மேல் அன்பு குறைவு அல்லது பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் மேல் அன்பு குறைவு என்று எண்ணி விடவும் முடியாது. 
 முதியோர் இல்லம் என்பதை கேட்டாலே நமது சிந்தனையில் சோகமும் வேதனையும் தான் தோன்றுகின்றது. இங்கு முதியோர் இல்லம் என்பது இந்த கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதல்ல என்பது தான் உணமை.  இடத்திற்கு இடம் வித்தியாசம்.
 (-சுபா)
 
புதிய பொருளாதாரத்தில் தமது பிள்ளைகள் முன்னேறும் வகையில்
வசதியான முதியோர் இல்லங்களில் பெற்றோர்கள் வாழ முன் வர
வேண்டும். அதற்கு பிள்ளைகள் உதவ வேண்டும். முதிய வயதில்
பிள்ளைகள் பெற்றோருக்குப் பொருளாதார உதவி அளிக்க வேண்டும்
என்னும் சட்டம் சிங்கப்பூரில் இருக்கிறது. 
பிள்ளைகள் தங்கள் இறுதிக் காலத்தில் தங்களுடன் இருந்து தங்களைப்
பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து தன் மதிப்பை இழந்து வருகிறது. 
ஆனால் கவிதைக்கு மட்டும் இந்தப் பொய் அழகாக இருக்கிறது.
(ரெ.கா.)
 
பிள்ளைகள் பெற்றொருக்கு உதவ வேண்டும் என்ர சட்டம் இந்தியாவிலும்வந்தாகிவிட்டது.
ஆனால் நடை முறையில் சரியாச செயல்படுதல் இல்லை.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பழகிப் போனவர்கள் இந்தியர்கள்.
பாசவலையிலிருந்து விடுபடுவது எளிதல்ல. கொஞ்சம் கொஞ்ச்மாகத்தான் மாறும். .
அமெரிக்காவில் 18 வயதில் பிள்ளைகளைப் பெற்றோர்களே தனித்து வாழ அனுமதிக்கின்றார்கள். ஒரு நாட்டுடன் இன்னொரு நாட்டை ஒப்பிட முடியாது. வரலாற்றின் காலம் பார்க்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் ஓரிடத்தில் தங்கி தங்கள் வாழ்க்கைக்குச் சில சட்ட திட்டங்கள் வகுத்து வாழ்ந்து பழகி விட்டனர். இப்பொழுது ஒரு கலாச்சாரத்திலிருந்து இன்னொன்ரு மாற்றம். மேலை நாடுகளில் பெர்ரவர்கள் தங்களுக்கென்று சேமிப்பு வைத்துக் கொள்வார்கள். பிள்ளைகள் தங்கல் வாழ்க்கைக்கு இளவயதில் ஆரம்பித்துவிடுகின்றனர். இந்தியாவில் கடைசிக் காசைக் கூடப் பிள்ளைகளுக்கென்று செல்வழித்துவிட்டு வயதான காலத்தில் கஷ்டப் படுகின்றனர்.படிப்பு, திருமணம்
இவைகளுக்குக் கடன்பட்டாவது செலவழிக்கும் பழக்கம் போக வேண்டும். வயதான காலத்தில் உழைக்கும் சக்தியும் , வேலை கிடைப்பதும் எல்லா நாடுகளுக்கும் இப்போதுள்ள சூழலில் பொருந்தாது. நான்காண்டுகள் பன்னாட்டு அமைப்பு
ஒன்றில் நான் இருக்கும் பொழுது ஒவ்வொரு நாட்டின் வாழ்வு முறையும் பேசப் பட்டது. ஒரு பிரச்சனைக்குத் தீர்வு என்பது ப்ல கோணங்களில் பார்க்க வேண்டியுள்ளது. இந்திய கலாச்சாரம் ஆன்மீகத்துடன் இணைந்துள்ளது. அந்தப் பிணைப்பிலிருந்து விடுபடநாளாகும். . முதியோர் இல்லங்களைப் பாருங்கள். எந்த நாடாயினும் சரி. ஏக்கம் இருக்கின்றது. ஓரளவு பொருளாதார நிலையில் முதியவர்களுக்கு வசதிகள் வேண்டும். பிள்ளைகளுக்குச் செலவழிப்பதைக் குறைக்க வேண்டும். முதலில் மன நிலையில் மனிதன் த்யாராக வேண்டும். .எந்த பந்தமும் நிலையல்ல. ஐரோப்பாவில் எங்கள் குழு பல இல்லங்கள் சென்று முதியோர்கள் வாழும் முறையைப் பார்த்திருக்கின்றோம். அமெரிக்கா, ஆசியாவிலும் நான் பார்த்திருக்கின்றேன். bondage லிருந்து விடுபட வேண்டும்.
(சீதாலச்சுமி)
 
சீதாம்மா,
நீங்கள் சொல்வது சரி. அதற்குத்தான் சமுகப் பாதுகாப்பு வலை தேவைப் படுகிறது.
முதிய காலத்தில் மனிதர்களைப் பார்த்துக் கொள்வதை அரசு ஒரு அத்தியாவசியக்
கடமையாக ஏற்க வேண்டும். அதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.
இன்சூரன்ஸ் திட்டங்களும் ஏற்படுத்தலாம். மனிதர்கள் வேலை செய்யும் காலத்திலேயே பணம்
செலுத்தி இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஏக்கம் தவிர்க்க முடியாதது. தள்ளாமையில்தான் ஏக்கம் என்பதில்லை.
பிள்ளைகளுக்கு இறக்கை முளைத்தவுடனேயே இந்த ஏக்கம் பெற்றோருக்கு
வருகிறதே! 
பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் இருந்தால் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும்
அவ்வப்போது சென்று பார்த்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தி வருவதைக் கடமையாகக்
கொள்ள வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களாகி  வயது முதிர முதிர இந்தக் கடப்பாடு
தானாக வருவதையும் காணுகிறேன். இந்த அவ்வப்போதைய சந்திப்புக்கள்தான் முதியவர்களின்
மகிழ்ச்சியின் உச்ச கட்டங்கள். 
இங்குள்ள முதியோர்
இல்லங்களில் நான் இதைப் பார்க்கிறேன். சிலர் மட்டும் வெறுத்துச் சண்டை போட்டு
முதியோர் இல்லத்துக்கு இழுத்துக்கொண்டு வரப் பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு இந்த அந்திம கால மகிழ்ச்சி வேளைகள் இல்லை. ஆனால்
சமுக நலக் குழுக்கள் இவர்களுக்கு உதவுகிறார்கள். 
அதோடு இருக்க வேண்டும். பிள்ளைகளைத் தங்கள் மடியில்
கடைசிவரை முடிந்து வைத்துக் கொள்வது கூடாது. (Vice-versa.) 
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பெற்றோர்களுக்கும் பாரமாக உள்ள
நிலையை நாம் திட்டமிட்டு இயல்பாக மாற்ற வேண்டும். இல்லையானால் இது
வன்முறை மாற்றமாக முடியும். 
(ரெ.கா. )
 
 
விரைவில் முதியோர்களுக்கான திட்டங்களை எழுதுகின்றேன். அர்சில், அதுவும் தமிழக அரசில் 800 கோடி டாலர் திட்டங்கள் இருக்கின்றன. உலக வங்கி கொடுத்துவருகின்றது. இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் சிலவும் இருக்கின்றன.
தயவு செய்து அரசு, அரசு என்று நாம் சொல்ல வேண்டாம். அரசசுடன் போய்ப் பேசினேன். அவர்களீடம் அரசுத் திட்டங்களைப் பற்றி விவாதித்தேன். குறைப்பாடுகளையும் கூறினேன். காலம் மாறிக் கொண்ட் வருகின்றது. . மனிதன் முதலில் உணர வேண்டும். இந்தப் பிரச்சனையை பல கோணங்களில் அணுக வேண்டியுள்ளது. நான் கூறியதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஒப்புக் கொண்டனர். இறைவன் எனக்கு 6 மாதங்கள் தங்க அனுமதி கொடுக்க வேண்டும்., ஆரோக்கியமும் வேண்டும்..தமிழ் நாட்டில் முன் மாதிரியாக ஆரம்பித்தால் பின்னர் நல்லவை தொடரும். எல்லாம் அரசு இயந்திரம் செய்ய வேண்டுமென்று நினைத்தலும் கூடாது. நீங்கள் எல்லோரும் பேசுகின்ற திட்டங்கள் இருக்கின்றதே. என்ன நடந்துவிட்டது. அரசு ஊழியராக இருந்தவள் இதைச் சொல்ல வெட்கப் படுகின்றேன். 
கணவன் மனைவி பந்தம் இளமையைவிட வயதான காலத்தில் மிகவும் தேவை. ஜப்பானில் நடந்த போராட்டமும் சட்டமும் தெரியுமா? கணவன் ஓய்வு பெற்றுவிட்டால் மனைவிக்கு விவாக ரத்து வேண்டும். அவளுக்கு வயட்தாகிவிட்டதாம். கிழவனுக்கு உதவி செய்ய முடியாதாம். சட்டம் பிரிவுக்கு அனுமதி கொடுத்துவிட்டது. இப்பொழுது அவனிடம் இருக்கும் சொத்தில் சரி பாதி வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்ரார்கள்.. பிள்ளைகள் மட்டுமல்ல, கணவனும் மனைவியும் கூடப் பிரிந்து வாழ எண்ணத் தொடங்கி விட்டார்கள். நம் நாட்டில் படிக்கும் காலத்தில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் வசதி கிடையாது. இருப்பவர்களுக்கே வேலை இல்லை. இரண்டு எழுத்து படித்தவுடன் அரசு வெலை வேண்டுமாம். வீடு கழுவவும் அமெரிக்கன் தயங்க மாட்டான். .
திருமனத்திற்கு நம் நாடு செலவழிக்கும் அளவு எந்த நாட்டிலும் கிடையாது. இன்னும் போலி கவுரவம் நமக்கு. போதை மருந்து போல் நம்மவர்கள் பல விஷயங்களில் மயங்கிக் கிடக்கின்றார்கள். 100 ரூபாய் ஒதுக்கினால் மக்களிடம் போய்ச் சேருவது 10ரூபாய்தான். . சமைக்க நாம் நிறைய நேரம் எடுக்கின்றோம். சாப்பாட்டு பழக்கங்கள் அப்படி. .வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கும் எனவே வெளிநாட்டில் முதியோர் தனியாகத் தங்க முடியும். ச்மையல், முதல் எல்லாம் சிம்பிள் வாழ்க்கை. எத்தனை யோசிக்க வேண்டும். முதலில் இருக்கும் திட்ட்ங்கள் நல்ல படியாக நடந்தாலே பிரச்சனைகள் எவ்வளவோ குறையும். NRE  பிள்ளைகள் பெற்றிருக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கி முதியோர் இல்லங்கள் நடக்கின்றன. அங்கும் நிம்மதி இல்லை. உடல் நலம் பாதிக்கப் [பட்டால் சரியான கவனிப்பு இல்லை. நானே தங்க பல இடங்கள் சென்று பார்த்தேன். இந்தியன் கலாசாரம் வாழ்கிழியப் பேசுகின்றான். ஆனால் மனிதம் அங்கே வியாபாரக் கடை விரித்துவிட்டது. குழுமத்திற்கு எழுதும் மடலாக எழுதவில்லை. அத்தனைதிட்டங்களும் சட்டங்களும் பார்த்துவிட்டுப் பேசுகின்றேன். எழுத முடியாதது நிறைய இருக்கின்றது. நானும் ஒரு கொத்தடிமை. அரசு தரும் பென்ஷன் வாங்குகின்றேனே. எனவே எனக்குப் பேச்சுரிமை அவ்வளவு கிடையாது. அய்யா.நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம். ஜனநாயக நாடு. என்ன திட்டம் போட்டாலும் செயல்படுத்தல், அதனைப் பயன்படுத்துவோரும் ஒழுங்கு கடைப்பிடித்தல் இரண்டும் வேண்டும்.. நம்மிடையே இரு எல்லைகளும் சரியில்லை. ஆனாலும் ஏதோ செய்து கொண்டிருக்கின்றோம். முதலில் பெற்றோர்களிடம் மனமாற்றம் வேண்டும். காலமாகும் . அதுவரை கஷ்டம்தான். 25 ஆண்டுகளாகப் பல நாடுகளைப் பார்த்து வரகின்றேன். நான்காண்டுகள் இருந்த ப்தவியில்  உலக நாடுகளில் நான்காகப் பிரித்து மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்திப் பல பிரச்சனைள் பேசப்பட்டன.ஆய்வுகளும் செய்திருக்கின்றோம் அவைகளில் ஒன்று குடும்பமும்.  .மலேசியாவிலும் ஒருமாதம் தங்கினேன். நம் ஆதங்கத்தை பேசுகின்றோம். இந்தியாவில் மாற்றத்தை சீரணிக்க இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும். முடிந்ததைச் செய்து கொண்டிருப்போம்.
(சீதாலச்சுமி)
 
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு  கிளை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா
 என்றொரு பாடல்
நினைவுக்கு  வருகிறது 
அந்தப்  பாடலில் கூட  பெற்றவர் குழந்தைக்கு பாரமா  என்னும் கேள்வி எழுப்பப்படவில்லை
இந்தக்காலத்துக்கு ஏற்ப    பெற்றவர்களும்  தங்கள்  வருங்காலத்துக்கு வேண்டிய பொருளாதாரத்தை  சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று மாறலாம் 
ஆனால்  நம்முடைய  சூழலில்  வயதான காலத்தில்நம்முடைய  நெருங்கிய சொந்தத்திடம் இருந்து  ,பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல 
நாம் பாசத்துக்கும் ஏங்குகிறோமே, பாசமான  சொல், ஒரு இதமான  தொடுகை, 
இவற்றுக்கும் சேர்த்துதானே ஏங்குகிறோம், 
தங்கள் மேல் ஏகப்பட்ட  சொத்துக்களை வைத்திருக்கும்  பெரும் பணக்காரர்கள் கூட
அன்புக்குதான்  ஏங்குகிறார்கள்  என்பது  கண்கூடு 
ஆகவே  இந்தப் ப்ரச்சனையை  பொருளாதாரப் ப்ரச்சனையாகமட்டும் பார்க்காமல்
மனம் சம்பந்தப்பட்ட பரச்சனையாக  நாம் அணுகுவதால்  ஏற்படும் விளைவுகளே தற்போதைய நிலை
என்பது  என் கருத்து
ஆகவே  இந்தப் ப்ரச்சனை பொருளாதாரத்தை மட்டும் சார்ந்ததல்ல ,நம்முடைய   வாழ்க்கைச் சூழல்  அமைந்த  முறை தான் காரணம்,
மேலை நாடுகளில்  தொடக்கத்திலிருந்தே தனியான மனப்பன்மையுடன் வளர்க்கிறார்கள்,
ஆனால்  நாம் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து  பாசம், அன்பு , பந்தம்  என்றெல்லாம் வாழ்ந்து  விட்டோமே,
அவற்றையெல்லாம்   திடீரென்று அவ்வளவு  எளிதாக  விலக்க முடியாது  என்பது  என் எண்ணம் 
அன்புடன்(தமிழ்த்தேனீ)
 
முதியோர் இல்லம் என்பதை கேட்டாலே நமது சிந்தனையில் சோகமும் வேதனையும் தான்
> தோன்றுகின்றது. இங்கு முதியோர் இல்லம் என்பது இந்த கண்ணோட்டத்தில்
> பார்க்கப்படுவதல்ல என்பது தான் உணமை.  இடத்திற்கு இடம் வித்தியாசம்.
இடத்திற்கு இடம் வேறுபாடு என்பதில் முரண்படுகிறேன். இடம் வேண்டுமானால்
வேறுபடுமே தவிர, மனிதச்சிந்தனை அவ்வாறு இல்லை. முதியோர் விடுதி அல்லது
காப்பகத்திற்கு செல்வது  எந்த ஒரு முதியவரையோ அல்லது மூதாட்டியின்
தன்னுரிமையை இழக்கும் நிலை. என்னதான் அவர்கள் தன்னிரைவான வாழ்க்கையின்
அந்தியில் இருந்தாலும், முதியோர் விடுதிக்கு செல்லவேண்டிய நாள்
வந்துவிட்டது என்று மருத்துவரோ அல்லது சமூகவியலாளரோ கூறும்போது, கூப்லர்
– இராஸின் ஐந்தினைத் துயரக் கோட்பாடுகள் (http://en.wikipedia.org/wiki/K
%C3%BCbler-Ross_model
) தான் எந்தவொரு நாட்டின் முதியோருக்கும்
பொருந்தும். இந்த நிலைகள் – முதியோருக்கு மட்டுமின்றி அனைவருக்கும்
பொருந்தும் உண்மை நிலை.  தாரகை
seethaalakshmi Subramanian seethaa…@gmail.com 
தயவுசெய்து தாங்கள் இந்த தளத்திற்க்கு சென்று பார்வையிட்டு தங்களது மேலான அபிப்பிராயங்களையிம், யோசனைகளையும் அனுப்பி தந்தால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன், அனுப்பவேண்டிய மெயில் ஐ டி sisulthan@gmail.com
நன்றி

அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள்

by Swathi Swamy on Sunday, 09 May 2010 at 15:40
மேலை நாட்டவரின் கட்டற்ற சுதந்திர வாழ்கை இளமைக்கு மட்டுமே பொருந்துகிறது. அந்த சுதந்திரத்தின் பலாபலன் கடைசிக் காலத்தில் முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து விடுகிறது பெரும்பாலும். கல்யாணம் , தாம்பத்தியம் , குடும்பம் எல்லாம் இரண்டாம்பட்சம். 18 வயது வந்தாலே பிள்ளைகள் தனியாக போய்விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கல்லூரிப் படிப்பு அல்லது காதலர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ நினைத்தல் போன்ற விசயங்களில் பெற்றோர்களை விட்டு பிள்ளைகள் பிரிந்து செல்கிறார்கள். அதே நேரம் தாயும் தந்தைக்கும் இடையில் கடைசி வரை உனக்கு நான் எனக்கு நீ என்ற மனப்பான்மை நிலைத்து நிற்காமல் போகும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படும் போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதை நாகரீகமாக கருதுகிறார்கள். பிரிந்து வாழ்வதும் புதிய துணையை தேடுவதும் அவரவர் சுதந்திரமாகிறது. தாய் தன்னுடைய பிறப்புக்குக் காரணமான தந்தையை பிரிந்து இன்னொருவருடன் வாழ தொடங்கும் போது அந்த மகன்/மகளுக்கும் தாய்க்குமிடையிலான இடைவெளி மனதளவில் விரிசலாகிறது. தாய் சேர்ந்து வாழும் ஆண்கள் எல்லாரையும் வளர்ப்புத் தந்தைகளாகவும், அப்பாவின் காதலிகள் ஒவ்வொருத்தரையும் தாயின் இடத்திலும் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலில் எந்தக் குழந்தைக்கும் அம்மா அப்பாவிடம் ஒட்டுதலோ பாசமோ மிதமிஞ்சியதாக இருக்காது.
தாய்மை என்பது எல்லா பெண்களிடமும் மென்மையான, தெய்வீகமான உணர்வாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த தாய்மையை பிள்ளைகளிடம் பகிர வேண்டிய சூழலும், ஸ்தானங்களும் முரணாக இருப்பதால் அம்மா, அப்பாவின் அண்மையோ, தேவையோ அவர்களுக்கு அவ்வளவாகத் தேவைப்படாமல் போய்விடுகிறது. வயது முதிர்ந்து, உடல் சருகாகிக் கொண்டிருக்கும் போது யாரும் சீந்தாமல் முதியோர் இல்லங்களில் பழைய நினைவுகளுடனும், புகைப்பட ஆல்பங்களுடனும் தனித்துவிடப் படும் போது தான் இன்னொரு தடவை தமது வாழ்கையை சரிசெய்து வாழ சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற ஏக்கம் இவர்களிடம் வரும்…
சில வருடங்களாக அன்னையர் தினத்தன்று பக்கத்திலிருக்கும் முதியோர் இல்லத்துக்கு போவது என் பிராணநாதரின் வழக்கமாகி விட்டது. அவரோடு சேர்ந்து நாங்களும் போவோம். , மலர்கள், வாழ்த்து அட்டைகள் என்று கொண்டு போய் கொடுப்போம்.
அந்த முதியோர் இல்லத்தை கடக்கும் ஒவ்வொரு சமயமும் அங்கு வாசலில் இருக்கும் எந்த முதியவரானாலும் கையசைத்து ஹாய் என்பார்..யாராவது தங்களுடன் நின்று ஒரு 5 நிமிசம் உரையாடமாட்டார்களா என்ற ஏக்கம் அவர்களிடம் நிறைந்திருக்கும்..!
ஹாய், ஹௌவ் ஆர் யூ என்ற வெகு சாதாரணமான விசாரிப்புகளிலேயே உவகை கொள்ளும் அவர்களை பார்க்கும் போது மனதுக்குள் மிகவும் வேதனையாக இருக்கும்..!
முகச் சுருக்கங்களுக்குள்ளும் , குழி விழுந்த கண்களுக்குள்ளும் புதைந்து போன ஏக்கங்களுடன் வலிந்து அனாதைகளாக்கப்பட்ட பல பெரியோர்கள் தம்மைச் சந்திக்க யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பார்கள்.
அந்த முதியோர் இல்லம் நாங்கள் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு பிளாக் தள்ளியிருக்கிறது. சில மாலை வேளைகளில் பக்கத்திலிருக்கும் ஸ்னக் கார்பர் என்ற கலாச்சார மையம் வரை நடந்து செல்வது எமக்கு வழக்கம். அந்த மையத்துக்கு போகும் வழியில் தான் இந்த முதியோர் இல்லம், அநேகமாக காலை வேளைகளில் முச்சக்கர வண்டியில் உட்கார்ந்த படி வீதியில் போவோர் வருவோரை எல்லாம் நலம் விசாரித்துக் கொண்டிருந்த பிரிஸ்ஸில்லா என்ற அந்த அம்மையார் ஒரு தடவை என் பிராண நாதரையும், என்னையும் நலம் விசாரித்தார். என்னவோ என் பிராணநாதர் அன்றைக்கு அந்த பெண்மணியுடன் கிட்டதட்ட 15 நிமிடங்கள் இருந்து உரையாடினார். அந்த வருடத்திலிருந்து தொடங்கியது அந்த முதியோர் இல்லத்துக்கு விசேச நாட்களில் போகும் பழக்கம்.
அன்னையர் தினம் அல்லது தந்தையர் தினம் போன்ற நாட்களில் தான் திக்குக்கு ஒன்றாக சிறகடித்த குஞ்சுகளில் சில தாய் பறவைகளைப் பார்க்க தனது பரிவாரங்களுடனும் பரிசுப் பொருட்களுடனும் வருகை தந்திருக்கும். சிலருக்கு அந்தக் கொடுப்பினையும் இருக்காது.
எனது பிராண நாதருக்கும் அவரது தாயைப் பார்த்து 19 வருடங்களாகிவிட்டன..! நாட்டு நிலமை இத்தனை காலமும் பிரித்துவிட்டது. அவர் அம்மாவை இங்கு வரச் சொன்னால் கடைசிக் காலத்தில் இந்த மண்ணை விட்டு வரமாட்டேனனென்று அவர் அம்மா அடம் பிடிக்கிறார். எப்படியாவது இந்த கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போக வேண்டும் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கிறார் சிநேகன்…! அதுவரை அவர் தனது தாயைச் சந்திக்கும் திருப்தியை இந்த முதியவர்களிடம் காணலாமென்று நினைக்கிறாரோ என்னமோ…!
ஒவ்வொரு தடவையும் போகும் போது முதல் தடவை சந்தித்த முதியோர்களில் இரண்டொருவரை காணக் கிடைக்காது. இறந்துவிட்டார்கள் என்றோ அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றோ தகவல்கள் சொல்வார்கள். அதனால் அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு தடவையும் கனத்த மனதுடனும் சோகத்துடனும் தான் திரும்ப வேண்டியிருக்கும், எங்களைப் போல் பலர் அவர்களைச் சந்திக்க வந்திருப்பார்கள். நேரடியாக நாம் எந்த உணவுப் பொருட்களையும் அவர்களுக்கு கொடுக்க இந்த இல்லத்தில் அனுமதிக்க மாட்டார்கள். வெறும் வாழ்த்து அட்டை அல்லது மலர் கொத்துகள் மட்டுமே கொடுக்க அனுமதியுண்டு. அந்த வாழ்த்து அட்டைகளும், மலர்களும் அவர்களிடம் கொண்டு வரும் அந்த நன்றி கலந்த மகிழ்ச்சிக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளலாம் போலிருக்கும்.
இளமைக் காலங்களில் கட்டற்ற சுதந்திரத்தினாலும், எப்படியும் வாழலாம் என்ற போக்கினாலும் மேலும் பல தீய, கெட்ட பழக்கவழக்கங்களினால் பாதிக்கப்பட்டுச், சீரழிக்கப்பட்டதினாலும் இவர்கள் வாழ்கை இந்த முற்றுப்புள்ளியில் முடிகிறது என்று வைத்துக் கொள்வோம்…..
ஆனால்…..
குடும்பம், தம்பத்தியம், ஒருவனுக்கு ஒருத்தி என்று கட்டுக் கோப்பாக வாழ்ந்து எங்களைப் பெற்றெடுத்து வளர்த்த எமது பெற்றோரில் பலரும் சமீபகாலங்களாக முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை அறியும் போது என் மனதில் எழும் இந்த கேள்வியை அலட்சியப்படுத்த முடியவில்லை.
மேலைநாட்டவர்களை அவர்களுடைய வாழ்கை முறையைப் பார்த்து தூற்றுவதும், கிண்டல் பண்ணுவதும் நாங்கள் தானே?? ஆனால் நாங்கள் எங்கள் வாழ்கையில் எமது வாழ்கை முறையை சரியாக கடைப்பிடிக்கிறோமா?? அப்படி கடைப் பிடித்தோமென்றால் எங்கள் பெற்றோர்கள் எங்களுக்கு எப்படி பாரமாவார்கள்? எங்கள் தேசங்களில் ஏன் முதியோர் இல்லங்கள் முளைத்தன??
யாராவது சொல்லுங்களேன்..!
*****************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s